தலையில்லாத உடம்பு போன்று காங். கூட்டணி – எடப்பாடி பழனிசாமி
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தலையில்லாத உடம்பு போன்றது என தேனி பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரிசல்பட்டி விலக்கில் அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
இந்த கூட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார். அத்துடன் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி கூட்டணி வேட்பாளர்களையும் அ.தி.மு.க. சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான லோகி ராஜன் (ஆண்டிப்பட்டி), மயில்வேல் (பெரியகுளம்) ஆகியோரையும் ஆதரித்து பேசினார்.
முன்னதாக, அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 130 கோடி மக்களை காக்கக்கூடிய வலிமையான பிரதமர் நரேந்திர மோடி என்றும், அவர் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என நாடே எதிர்பார்ப்பதாகவும் கூறினார். மேலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
“தலையில்லாத உடம்பு போன்று காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. தமிழகத்தில் ஒரு மாதிரியும், கேரளாவில் ஒரு மாதிரியும் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்துள்ளது. நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் தவறாக பேசி வருகிறார். தமிழகத்தை பாலைவனமாக்க ஸ்டாலின், ராகுல் முயற்சி செய்கிறார்கள். ஸ்டாலினை தவிர வேறு யாரும், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை” என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்சசெல்வம் பேசும்போது, நாட்டில் மதக்கலவரங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியவர் பிரதமர் மோடி என்று புகழாரம் சூட்டினார். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அதிமுக, பாஜக செயல்படுகிறது என்றும், தர்மத்தின் கூட்டணியான நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.