தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரான்சில் இரங்கல் திருப்பலி!
இலங்கையில் இடம்பெற்ற இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களினால் உயிரிழந்தவர்களுக்கு பிரான்சில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது இஸ்லாமியப் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து தொடர்ந்தும் இலங்கைமீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கைவிடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்களே தினமும் இடம்பெறுகின்றன.
இந்தநிலையிலேயே படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக பிரான்சில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ், வெர்சாய்லில் உள்ள தேவாலயத்தில் நேற்று(திங்கட்கிழமை) மாலை இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.