தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்புக்காகவும் இந்தியா செயற்படும் – விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பு
ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையில் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுக்காக இந்தியா செயற்படும் எனத் தான் எதிர்ப்பார்ப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்து அவருக்கு அனுப்பியுள்ள செய்தியில் விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீங்கள் மீள தெரிவான நிலையில், பலவிதமான துன்பத்தை தொடர்ந்தும் அனுபவித்துவரும் இலங்கை தமிழ் மக்கள், தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வொன்று கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை தாங்கள் மேற்கொண்டிருந்த வேளையில், இணைந்த இலங்கையில் தமிழ் மக்கள் சம அந்தஸ்து, சுயகௌரவம் மற்றும் பாதுகாப்புடன் வாழ அரசியல் தீர்வொன்றை பெற வேண்டும் என்பது குறித்து வலியுறுத்தியிருந்தீர்கள் என்பதையும் விக்னேஸ்வரன் நினைவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய மக்கள் உங்களை மீண்டும் தெரிவு செய்துள்ளதையடுத்து, அயல் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் மோடி பூர்த்தி செய்வார் எனத் தான் எதிர்பார்ப்பதாக சி.வி. விக்னேஸ்வரன் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.