Main Menu

தமிழர்களுக்காக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

குருந்தூர் மலையில் பௌத்த தேரர் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள தனியார் காணிகளில் சொந்த நிலத்தில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு விவசாயிகள் கைது செய்யப்பட்டமை, தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட்டு காணிகள் உரிமையாளர்களிடம் கையளித்தல், வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த சர்வதேச சமூகம் அவசரமாக தலையிட வேண்டும் என கோரி தமிழ் தேசிய பேரவையினர் பிரித்தானிய, இந்தியா, கனடா, ஜக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர்களிடம் வலிறுத்தியுள்ளதாக தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய பேரவையினருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கையும், இந்திய துணைத்தூதுவர் கலாநிதி பாண்டே யுடன் மற்றும் ஜக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி மகான்ரே பிறஞ்சேயுடன், கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்புக்கள் கொழும்பில் இடம்பெற்றுள்ளன.

குறித்த சந்திப்பில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வாராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் குறித்த சந்திப்புகளில் கலந்து கொண்டனர்.

 

இதனை தொடர்ந்து சந்திப்பின் பின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக அறிக்கை ஒன்றை நேற்று (14) வெளியிட்டுள்ளார்.

 

ஊடக அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது,

 

இந்த சந்திப்பின் பொழுது கடந்த 2025 மார்ச் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடமாகாணத்தின் வவுனியா தவிரந்த நான்கு மாவட்டங்களில் சுமார் 6,000 ஏக்கர் காணியை அரச காணியாக சுவீகரிக்கும் அரசின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக நாம் எமது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தோம். மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து உரித்தை உறுதிபடுத்த வேண்டும் என்ற அந்த நிலைப்பாட்டினை அரசு மீள பெறவேண்டும் என வலியுறுத்தினோம்.

 

வட கிழக்கு மக்கள் யுத்தகாலத்தில் பல தடவைகள் இடம்பெயர்வுகள் காரணமாகவும், போர் அழிவுகள் காரணமாகவும் பெருமளவு மக்கள் சொந்தமான காணி ஆவணங்கள், சொத்துக்களை இழக்க வேண்டி ஏற்பட்டது. அத்துடன் சுனாமி மூலமாகவும் எமது மக்கள் சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை இழந்தார்கள். ஆகவே ஆவணங்களை உறுதிபடுத்துவது சாத்தியமற்ற விடயம். அதேவேளை போர் காரணமாக தமிழீழ மக்களின் சனத்தொகை பரம்பல் புலம்பெயர்ந்துள்ளது.

 

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட எமது ஈழ தமிழர்கள் இந்திய பிரஜைகளாக அங்கீகாரம் இன்றி வாழ்கின்றனர். அவர்கள் அங்கு அங்கீகரிக்கப்பட போவதுமில்லை. இவ்வாறான நிலையில் அந்த மக்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு வருகை தரவேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்கள் இங்கே வாழ முடியாத சூழல் உருவாகும். இதில் இந்தியாவிற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்ற அடிப்படையில் இந்திய துணைத்தூதுவரையும் சந்தித்தோம்.

 

இந்த மக்கள் அரசின் பயங்கரவாத அச்சுறுத்தல் மூலமே நாட்டினை விட்டு வெளியேறினார்கள். இந்நிலையில் அரசு இந்த வர்த்தமானியை வெளியிட்டதன் நோக்கம் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பதல்ல. மாறாக மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக சுவீகரிப்பதே இவர்களது நோக்கமாக உள்ளது.

 

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரித்துக்கள் வழங்கவேண்டும் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை. இந்த வர்த்தமானி மூலம் மேற்கொள்ளப்படுகின்ற திட்டத்தினை முற்று முழுதாக ஏற்றுகொள்ள முடியாது. எனவே குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படல் வேண்டும். அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 

இரண்டாவது விடயம், குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான 79 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேலதிகமாக  325 ஏக்கர் காணியினை விகாரைக்குரிய புத்த பிக்கு கோரியிருந்தார். ஆனால் அக்காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானதல்ல என்ற அடிப்படையிலும் அப்பகுதியில் பெருமளவு விவசாயிகளது விவசாய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு மறுக்கப்பட்டிருந்தது.

 

எனினும் பிக்குவும் தொல்பொருட் திணைக்களத்தினரும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சொந்தக் காணியில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இருவரையும் கைது செய்து உழவு இயந்திரத்தையும் நீதிமன்றில் நிறுத்தி நீதிமன்றின் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க குறித்த 325 ஏக்கர் நிலத்தையும் விடுவிக்க வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கூறியிருந்தார். அவ்வாறு ஜனாதிபதி முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்வு எட்டபட்ட பின்னரும் அத்தீர்மானத்தையும் மீறி இன்றும் கூட அந்த வளாகத்தில் உள்ள குளத்தில் மீன்பிடி தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு, விவசாயத்திற்கு குறித்த நீரை பயன்படுத்த தடையையும் விதித்து விவசாயமும் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

எனவே இவ்விடயத்தில் தலையிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க இணங்கியவாறு குறித்த 325 ஏக்கர் நிலத்தையும் தொல்பொருள் திணைக்களம் விடுவிக்கவும் பிக்குவின் அடாவடியை கட்டுப்படுத்தவும் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

 

மூன்றாவதாக, தையிட்டி சட்டவிரோதமான விகாரை என்று தெரிந்தும் இன்னமும் அந்த காணிகளின் உரிமையாளர்களிடம் வழங்காது அரசின் செயற்பாடுகள் தொடர்கின்றது. தையிட்டி விகாரை சட்டவிரோதமானது தொல்பொருளுடன் தொடர்பு அற்றது.  சட்டவிரோதமாக கட்டப்பட்டது அகற்றப்பட வேண்டும். காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

 

எனவே இலங்கையின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை செலுத்தும் மைய நாடுகளாக பிரித்தானியா மற்றும் கனடா என்பன இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபைக்கு இது தொடர்பில் பங்கு இருப்பதால் ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியிடமும் இவ்விடயத்தில் அவரது தலையீட்டை வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares