தமது நாட்டவர்களை சிறிலங்காவை விட்டு வெளியேறுமாறு கோருகிறது சவூதி அரேபியா
சிறிலங்காவில் உள்ள தமது நாட்டவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு, சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தை மேற்கோள்காட்டி, அந்த நாட்டின் அரச தொலைக்காட்சியான அல் எக்பாரியா இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, சவூதி அரேபிய நாட்டவர்களை சிறிலங்காவில் இருந்து வெளியேறுமாறு தூதரகம் கேட்டுக் கொள்வதாக, சவூதி அரேபிய தூதரகத்தின் கீச்சக குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் மற்றும் அதையடுத்து, நடத்தப்படும் தேடுதல்கள், விசாரணைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டே சவூதி அரேபிய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.