Main Menu

டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் – சாணக்கியன் வலியுறுத்து!

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் இடம்பெற்ற மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதி ஆகியவற்றை கோரி தொடங்கப்பட்ட போராட்டம் 4வது நாளாக இன்றும் முழு வீச்சுடன் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்போது மீனவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டிருந்தார்.

மீனவர்கள் மதுபோதையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.

அத்துடன், மீனவர்களின் கோரிக்கையினை நிறைவேற்ற முடியாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக பதவி விலக வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.