ஜனாதிபதியின் எச்சரிக்கையையும் மீறி, பாராளுமன்ற தெரிவுக்குழு கூடுகிறது …
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கு அறிக்கை இடுவதற்கான நியமிகப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை 11.06.19 திட்டமிட்டபடி நடைபெறும் என அக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன நேற்று முன்தினம் கூட்டிய விசேட அமைச்சரவையில் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மேற்படி பாராளுமன்ற விசேட தெரிவிக்குழுவின் அமர்வுகள் நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பியபோதே அதன் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதியின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அவர் குறிப்பிட்ட வகையிலான தரப்பினர் அடுத்து நடைபெறவுள்ள அமர்வில் பங்கேற்கவில்லை. முஸ்லிம் சமுகத்தினைச் சேர்ந்த பிரதிநிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே தெரிவுக்குழு உருவாக்கப்பட்டுள்ளமையும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்றும் பிரதிசபாநாயர் ஆனந்த குமாரசிறி சுட்டிக்காட்டியிருந்தார்.
தெரிவுக்குழுவின் குறித்த அமர்வில் மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் எம்.ஐ.எம் றிஸ்வி, கலீல் மௌலவி மற்றும் காத்தான்குடி பள்ளிவாயலைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாதுகாப்புச் செயலாளர் எஸ்.எச்.சாந்த கோட்டேகொட, புலனாய்வுப்பிரிவுத் தலைவர் சிசிரமென்டிஸ், முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் நலக்க டி சில்வா, காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் இதுவரையில் சாட்சியங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குற்றப்புலனாய்வுப் பிரதானி ரவி செனவிரட்ன, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பணிப்பாளர் வருண ஜெசுந்தர ஆகியோரையும் அடுத்து வருகின்ற அமர்வுகளில் வரவழைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. எவ்வாறாயினும் பாதுகாப்புத்துறை சார்ந்த அதிகாரிகளை முன்னிலையாவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.