Main Menu

சென்னையில் குடிநீர் பஞ்சம் – லாரி தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் தவிப்பு

பருவமழை பொய்த்ததால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், லாரி தண்ணீர் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். #DrinkingWater

சென்னை:

பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு கிடக்கிறது.

கடந்த ஆண்டு 4 ஏரிகளிலும் 3278 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால் இன்று 261 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. சென்னைக்கு தினமும் 854 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் இப்போது 400 மில்லியன் லிட்டர் குடிநீர் தான் வினியோகிக்கப்படுகிறது.

வீராணம் ஏரியில் இருந்து வரும் குடிநீர், கடல் குடிநீர், கல்குவாரியில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர் ஆகியவைதான் சென்னைக்கு வினியோகிக்கப்படுகிறது. இதுதவிர விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரையும் லாரி மூலம் வினியோகம் செய்து வருகின்றனர்.

ஆனால் ஆழ்துளை கிணறுகள் வறண்டு வருவதால் அதிலும் 2 மணிநேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. தெருக்களுக்கு லாரி தண்ணீரும் காலை மாலைகளில் சரிவர வருவதில்லை.

1 லாரி தண்ணீர் வந்தால் 500 காலி குடங்களுடன் பெண்கள் சூழ்ந்துவிடுகின்றனர். சென்னையில் 900 லாரிகள் மூலம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடைகள் தண்ணீர் வினியோகம் நடைபெறுவதாக கூறினாலும் நிறைய தெருக்களில் 1 முறை தான் லாரி தண்ணீர் கிடைக்கிறது என்று மக்கள் ஆதங்கப்படுகின்றனர். சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை, மேடவாக்கம், சிட்லபாக்கம், வில்லிவாக்கம், சேலையூர், கோவிலம்பாக்கம், திருவொற்றியூர், சூளைமேடு, அடையார், கிண்டி பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டதால் வாடகைக்கு குடியிருக்கும் பலர் வீடுகளை காலி செய்து விட்டு குடிநீர் வசதி உள்ள வீடுகளுக்கு இடம்மாறி வருகின்றனர்.

ஆனால் வீட்டு வாடகை 2 ஆயிரம் ரூபாய் அதிகமாக சொல்கிறார்கள். ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டின் வாடகை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாகவும், இருபடுக்கை அறை வீட்டின் வாடகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடிக்கு தண்ணீர் ஏற்றும் அளவுக்கு நீர்வரத்து இல்லாததால் மாடியில் இருப்பவர்களும் வீடுகளை காலிசெய்து வருகிறார்கள்.

சென்னை குடிநீர் வாரியம் லாரி தண்ணீரை வினியோகம் செய்தாலும் வீட்டுக்கு வீடு குடிப்பதற்கு ‘கேன் வாட்டர்’ தான் பலர் வாங்குகின்றனர். இதனால் ‘கேன் வாட்டர்’ விலையை ரூ.25 முதல் ரூ.50 வரை கடைக்காரர்கள் உயர்த்தி விட்டனர்.

‘அக்வாபினா’ ‘கின்லே’ போன்ற ‘கேன் வாட்டர்’ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. குடிநீர் வாரியத்தில் லாரி தண்ணீருக்கு பதிவு செய்தால் 1 வாரம் கழித்து தான் வருகிறது. தனியார் லாரிகளும் அழைத்தவுடன் வருவதில்லை. இதனால் குடிநீருக்கு நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர்.

சென்னை நகருக்குள் 1 நாள் விட்டு 1 நாள் ஓரளவு தண்ணீர் கிடைத்தாலும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 500 ரூபாய்க்கு கிடைத்த மினி லாரி தண்ணீர் இப்போது ரூ.1000 கொடுத்தால் தான் கிடைக்கிறது.

இதுபற்றி குடிநீர் வாரிய அதிகாரி கூறுகையில் கிடைக்கிற தண்ணீரை சமமாக பிரித்து தெருக்களுக்கு அனுப்பி வைக்கிறோம். பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் வறண்டுவிட்டதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. மழை பெய்தால் தான் இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியும். அதுவரை தட்டுப்பாடு இருக்கத்தான் செய்யும். நிலைமையை சமாளிக்க லாரி தண்ணீரை அதிக அளவு அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

முகப்பேரில் வாட்டர் கேன் வியாபாரம் செய்யும் பி.வி.தமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவும், சுத்தமான குடிநீர் கிடைக்காத காரணத்தாலும் ‘கேன் வாட்டர்’ வாங்காத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு வீட்டுக்கு வீடு கேன் வாட்டர் வாங்குகிறார்கள்.

இதனால் கேன்வாட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. விலையும் ஏறிக்கொண்டே போகிறது. பிராண்டுக்கு ஏற்ப விலை உள்ளது. ரூ.20 முதல் ரூ.80 வரை கேன் வாட்டர் விற்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.