Main Menu

சுயாதீன ஊடகவியலாளரான பிரகாஸ் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு !

கொரோனோ தொற்று உறுதியாகியிருந்த சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸ் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ், சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளை கட்டுரைகளை எழுதி வந்தார்.

அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்த அவர், முகநூலில் உடனுக்கு உடன் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை பதிவேற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக தலைவலி, இருமலுடன், இலேசான காய்ச்சலுடன் பீடிக்கபப்ட்டு இருந்த நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை அன்டிஜன் பரிசோதனையை தானாக முன் சென்று பரிசோதித்த போது அவருக்கு தொற்று உறுதியானது.

இந்த விடயம் தொடர்பாக, புதன்கிழமை மாலை 3 மணிக்கு தனது முகநூலில் “கடந்த ஐந்து நாட்களாக இலேசான தலைவலி இருமலுடன் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தேன். சற்று தேறிவரும் நிலையில் இன்று அன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
குணமடைந்த பின்னர் தடையின்றி எனது பணிகள் தொடரும். அதுவரை காத்திருங்கள்” என பதிவேற்றி இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் மாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து , சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்பட்டதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அவற்றை எல்லாம் தாண்டியும் அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.