சீனாவின் கோரிக்கையை ஏற்று முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல் படுத்தியது மியன்மார் இராணுவம்!
சீனாவின் கோரிக்கையை ஏற்றுள்ள மியன்மார் இராணுவம், போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
இதன்படி, வடக்கு டேகான், தெற்கு டேகான், டேகான் செய்க்கன், வடக்கு ஒக்கலாப்பா ஆகிய பகுதிகளில் அந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, யாங்கூனின் ஹலிங் தார் யார் மற்றும் ஸ்வேபிதா நகரங்களில் இராணுவ சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக மியன்மார் இராணுவத்துக்கு சீனா ஆதரவாக இருப்பதாக கூறி அந்நாட்டு நிறுவனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.
இதையடுத்து, வன்முறைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மியன்மார் அரசாங்கத்தை கேட்டுக் கொண்ட சீன தூதரகம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
மேலும் மியான்மரில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று மியன்மார் இராணுவத்தை சீன வலியுறுத்தியது. இதற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி கவிழ்த்தது.
அத்துடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பகிரவும்...