சிரியா ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா நாட்டின் ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் விமானப்படைகள் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா போராளிகள் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போராளிகளை வேட்டையாட இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.
அவ்வகையில், இன்று அதிகாலை லெபனானில் இருந்து புறப்பட்டு சென்ற இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் சிரியாவின் மத்திய பகுதியில் மாஸ்யாப் நகரில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.
இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகளில் சிலவற்றை தடுத்து அழித்து விட்டதாகவும் இந்த தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த 3 வீரர்கள் காயமடைந்ததாகவும், ராணுவ முகாமின் சில பகுதி சேதமடைந்ததாகவும் சிரியா அரசு தெரிவித்துள்ளது.