Main Menu

சவேந்திர சில்வா விவகாரம் ; அமெரிக்கக் குடியுரிமை ; கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு குறித்து அமெரிக்கத் தூதுவர்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விடயத்தில் நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன. நீதிமன்ற விசாரணையின் மூலமாக நல்லதொரு முடிவு வரக்கூடியதாக இருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆனால் அது சவேந்திர சில்வா விடயத்தில் நடக்கவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியிருக்கிறார்.

கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேற்று வியாழக்கிழமை நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் தூதுவர் அலைனா, தற்சமயம் முறைப்பாடுகளே இருக்கின்றன. அவை பாரதூரமானவையா? நம்பகத்தன்மையானவையா? அல்லது இல்லையா என்பது வேறு விடயம். சவேந்திர சில்வா விடயத்தில் பெருமளவு ஆவணப்படுத்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஐக்கிய நாடுகளினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் அவை தொகுக்கப்பட்டிருக்கின்றன. 

முப்பது வருடகால யுத்தத்தின் போது அதில் சம்பந்தப்பட்ட தரப்பினராலும் கொடூரங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை முழுமையாக அடிவரை விசாரித்தறிய வேண்டிய தேவையிருக்கிறது, அதுவே இப்போதிருக்கம் சவால்களில் ஒன்று. உண்மையைக் கண்டறிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தை முழுமையாகக் கையாள்வதற்கு செயன்முறையொன்று தேவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெனரல் சில்வாவின் நியமனம் தொடர்பில் அமெரிக்காவினால் வெளிப்படுத்தப்பட்ட அக்கறை இலங்கையின் இறைமையை மீறுவதாக மக்கள் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அதுபற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள் என்று அமெரிக்கத் தூதுவரிடம் கேட்கப்பட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்:

‘அமெரிக்காவின் கொள்கைகளையும், தீர்மானங்களையும் பகிர்ந்து கொள்வதே எனது கடமை. புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பில் அமெரிக்காவினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்து தொடர்பிலும் இதையே நாம் செய்தோம். இலங்கையின் நற்பெயர், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கத்திற்கு இருக்கும் கடப்பாடு ஆகியவை குறித்து நாம் அக்கறையை வெளிப்படுத்தியிருக்கின்றோம். அவரை நியமியுங்கள், இவரை நியமியுங்கள் என்று நாம் கூறவில்லை. இந்த விடயத்தில் எனது நிலைப்பாட்டை மாத்திரம் நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம்.

‘எதைச் செய்ய வேண்டுமென்று ஒரு நாட்டிற்குக் கூறுவதற்கும், அந்த நாட்டின் நடவடிக்கைகள் குறித்து எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இலங்கை அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் கூறுவதாக மக்கள் வியாக்கியானப்படுத்திக் கொள்வார்கள் என்று நீங்கள் கூறுவது சரியானதே. என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்குக் கூறவில்லை. தாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை இங்குள்ள அரசாங்கமும், மக்களும் தான் தீர்மானிக்க முடியும். எமது அக்கறைகளையும், ஏனைய நாடுகளின் அக்கறைகளையும் இலங்கை அரசாங்கமும், மக்களும் கருத்தில் எடுப்பார்களெ நிச்சயமாக நம்புகின்றேன்’

கோத்தபாயவின் குடியுரிமை விவகாரம்

கேள்வி : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனது அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிட்டுவிட்டதாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் இப்போது ஒரு அமெரிக்கப் பிரஜை இல்லையா?

பதில் : முதலில் நாம் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் நாம் குறிப்பிட்ட சில அந்தரங்கச் சட்டங்களைக் கொண்டிருக்கிறோம். தனிப்பட்டவர்களின் விவகாரம் குறித்து நாம் கருத்துச்சொல்ல முடியாது. கோத்தபாய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் குறித்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்கு ஊடகங்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. குடியுரிமையைக் கைவிடுவதென்பது ஒரு நிர்வாகச் செயன்முறை ஆகும். சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இறுதியில் குடியுரிமையைக் கைவிடலாம்.

இறுதியாக வெளியிடப்பட்ட பதிவேட்டில் கோத்தபாயவின் பெயர் இருக்கவில்லை என்பது தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதை நான் அறிவேன். குடியுரிமை இழப்புத் தொடர்பில் பெயரைப் பட்டியலிடும் விடயத்தில் சமஷ்டிப் பதிவேடு பல மாதங்கள் பிந்திய நிலைவரத்தைக் கொண்டதாக இருக்க முடியும். இந்த விடயத்தில் திட்டவட்டமான ஒரு செயன்முறை இருக்கிறது என்பது தெளிவானது. அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்க விரும்புகின்ற ஒருவர் விண்ணப்பப்படிவங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும். அவற்றைப் பெறும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர் கிரிமினல் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருக்கிறாரா, இல்லையா, வரிக்கொடுப்பனவுகளை முறையாகச் செலுத்தியிருக்கிறாரா, இல்லையா என்ற பரிசீலனைகளை மேற்கொள்வர். அதன் பின்னர் அந்த நபர் அமெரிக்கக் குடியுரிமையை இழப்பது தொடர்பில் சத்தியப்பிரமாணத்தைச் செய்துகொள்ள வேண்டும்.

சமஷ்டிப் பதிவேடு பல மாதங்கள் பிந்திய தகவல்களைத் தருவதாகவும் இருக்கலாம். அதனால் அடுத்த காலாண்டுக்கு அல்லது அதையும்விடப் பின்னரும் நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

கேள்வி : அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : வழக்குகள் கிரிமினல் வழக்குகளா? சிவில் வழக்குகளா? என்பதைக் குறித்ததே இந்த விடயம். குடியுரிமையைத் துறப்பதற்கு சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக கிரிமினல் முறைப்பாடுகள் இருக்கக்கூடாது. முன்னர் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக கலிபோர்னியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையே நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கிறேன். அவை சிவில் வழக்குகளே.

கேள்வி : கடந்த தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவை அமெரிக்கா ஆதரித்ததாக முறைப்பாடுகள் இருந்தன. இத்தடவை கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்கா ஆதரிப்பதாக ஒரு கதை உலவுகிறது. இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்? 

பதில் : நாங்கள் இந்தத் தேர்தலில் சம்பந்தப்படுவதில்லை. தீர்மானத்தை எடுப்பது இலங்கை மக்களைப் பொறுத்தது. நாங்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை. ஆனால் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் செயன்முறையை நாங்கள் ஆதரிக்கின்றோம். கடந்த காலத்தில் நாம் அவ்வாறு ஆதரிக்கின்றோம். ஜனநாயக செயன்முறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய விரும்புகின்றோம். பலம் பொருந்தியதும், ஆற்றல் மிக்கதுமான தேர்தல் ஆணைக்குழுவொன்று உள்ளது. அதன்மீது நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

கேள்வி : 2015 இல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை நீங்கள் வரவேற்றீர்கள். இத்தடவை?

பதில் : அரசாங்க மாற்றத்தை வரவேற்பதற்கும், கொள்கைகள் மாற்றத்தை வரவேற்பதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.

கேள்வி : சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்ட போது அமெரிக்கா விசனம் வெளியிட்டது. ஆனால் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த போது மௌனம் சாதித்தது. இவ்விருவருக்கும் எதிராக மனித உரிமை மீறல் முறைப்பாடுகள் இருக்கின்றன. விசனத்தை வெளிப்படுத்துவதில் அமெரிக்கா ஏன் இவ்வாறு வித்தியாசமாக நடந்துகொள்கிறது?

பதில் : இராணுவத் தளபதி ஒரு அரசாங்க அதிகாரி. ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு வர ஆசைப்படும் ஒருவர். ஒரு அரசியல் கட்சி வேட்பாளரை நியமிப்பதற்கும், உத்தியோகபூர்வ பதவியில் அரசாங்கம் ஒருவரை நியமிப்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது.

கேள்வி : நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறீர்கள். அவரது பதவிக்காலத்தில் இருதரப்பு உறவுகள் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. அவரைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்? 

பதில் : நான் ஒரு வருடத்திற்கு முன்னரே இலங்கைக்கு வந்தேன். சில தடவைகள் ராஜபக்ஷவை சந்தித்திருக்கிறேன். அரசியல் கட்சிகள், குழுக்களை பரவலாகச் சந்திப்பதன் ஓரங்கமே அதுவாகும். அரசியல் தலைவருடன் தொடர்பில் இருக்க வேண்டியது முக்கியமானது என்று நான் நினைக்கின்றேன். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களையும் நான் சந்தித்தேன். தங்களது தலைவர்களைப் பற்றி இலங்கை மக்கள் தீர்மானமொன்றை எடுக்கப் போகிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். அரசியல்வாதிகளுடன் ஒன்றாக அமர்ந்திருந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றால், இணக்கத்தை நாம் கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவர்கள் எமது கொள்ககைளை, எமது நோக்குகளை, உறவு முறைக்கான நம்பிக்கைகளை வழங்கிக் கொள்வது முக்கியமாகும். அதனால்தான் நாம் பல்தரப்பட்டவர்களுடனும் தொடர்பில் இருக்கின்றோம். மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சு மிகவும் சுமூகமானதாக அமைந்திருந்தது.

பகிரவும்...