கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து நிவாரணம் வழங்குவதற்கான வழிக்காட்டுதல்களை 6 வாரங்களுக்குள் பரிந்துரைக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்த பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பதற்கான வழிக்காட்டுதல்களை என்டிஎம்ஏ வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளதாகவும், இந்த தொகை முதலாம், இரண்டாம் அலை தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமன்றி எதிர்காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கும் மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.