Main Menu

கொரோனா தொற்றுக் காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்? – சி.வி.கே. கேள்வி

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த கட்டடத்தை மாகாண சபைக்கு கையளிக்க வேண்டும் என்ற தீர்மானம் வட மாகாண சபையில் 2016 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது என கூறினார்.

மேலும் குறித்த பிரேரணை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது அவசரம் காட்டுவது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்தும் கடற்படையினரின் வசமுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சர்வதேச விருந்தினருக்கான சந்திப்பு நிலையம் எனும் பெயரில் இலங்கை முதலீட்டு சபை ஏலத்தில் வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் மக்களின் காணிப் பிரச்சினை தீர்க்கப்படாமல் அரசாங்கம் அந்தப் பகுதியை எவ்வாறு மற்றவர்களுக்கு வழங்க முடியும் என வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ், கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை, கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளமை தற்போது பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.

பகிரவும்...
0Shares