கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது இராணுவ மயமாக்கலுக்கு வழிவகுக்கும் -ரணில்
கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவமயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மீண்டும் நாடாளுமன்ற வாழ்க்கையொன்றை ஆரம்பிக்க கிடைத்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக அனைத்துத் தரப்புக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் கடந்த காலங்களைப் பற்றி பேச விரும்பவில்லை. இந்த அரசாங்கம் தற்போது வரிச்சலுகைகளை வழங்கியுள்ளது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், அந்த வரிச்சலுகை பணக்காரர்களுக்கும் மேல்தட்டு மக்களுக்குமே வழங்கப்பட்டுள்ளது. கீழ்த்தட்டு மக்களுக்கு வெறும் பசியை மட்டும்தான் இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு 700 கோடி டொலர் கிடைத்தது. இன்று அது 400 கோடி டொலராக குறைவடைந்துள்ளது.
வணிக வங்கிகள், வெளிநாடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நாம் கடன்களைப் பெற்று வருகிறோம். இதன் ஊடாக எவ்வாறு நாம் எமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவது? இதற்கான திட்டமொன்றை அரசாங்கம் வகுத்துள்ளதா?
ஒரு கொள்கையொன்றை வகுக்காகமல் புள்ளிவிபரங்கள் குறித்து பேசுவதில் பலன் இல்லை. அப்படியான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தால் நாமும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவே உள்ளோம்.
இன்று எம் முன்னால் பல சவால்கள் உள்ளன. கொரோனா- எரிபொருள் பிரச்சினையென பலப்பிரச்சினைகள் காணப்படுகின்றன.
கொரோனா ஒழிப்பு செயலனியொன்று உருவாக்கப்பட்டது. ஆனால், இது முற்றிலும் தோல்வியடைந்த ஒன்றாகும்.
நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இதற்கான பொறுப்பை அமைச்சரவைக்கு வழங்க வேண்டும். அரசமைப்பிலும் இதற்கான சரத்துக்கள் உள்ளன.
அமைச்சரவை இதற்கான பொறுப்பினை எடுத்தால் மட்டுமே நாம் நாடாளுமன்றில் விவாதிக்க முடியும். குறைந்தது பதாதைகளை ஏந்தி எதிர்ப்பையேனும் காண்பிக்க முடியும்.
இராணுவத்தளபதியால் எவ்வாறு இந்தச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் இதற்கான தலைமையை சுகாதார அமைச்சர் ஏற்கவேண்டும். இராணுவத்தினர் ஊடாக இதனைக் கட்டுப்படுத்த முடியாது.
எனக்கும் இராணுவத்தளபதிக்கும் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. ஆனால், இந்த செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. இது இராணுவமயமாக்கலுக்குதான் வழிவகுக்கும்.
மக்கள் இதற்காக அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை. அரசியல் ரீதியாக கருத்து முரண்பாடுகள் எமக்குள் இருந்தாலும், அரசாங்கம் மேற்கொள்ளும் கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.
இதற்காக ஒருநாள் விவாதத்தை நடத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.
பகிரவும்...