கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் அவசர காலச்சட்டம் நீடிப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்காவில் அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கின்ற பிரேரணை- 14 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டத்தை மே 22 ஆம் நாளில் இருந்து மேலும் ஒரு மாதத்துக்கு, நீடிக்கும் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்தார்.
இந்த அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு அனுமதி அளிக்கும் பிரேரணை நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, அவசரகாலச்சட்டத்தை நீடிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிறீதரன் உள்ளிட்டவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் நசுக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
அவசரகாலச் சட்டம் நீடித்தால் தமிழர்களின் நிலங்கள் பறிபோகும் என்றும், குறிப்பிட்டனர்.
அத்துடன், அவரசர காலச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு முடிவெடுத்துள்ளதாகவும் அவர்கள் சபையில் அறிவித்தனர்.
இந்த விவாதத்தை அடுத்து, பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடுமாறு கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்தார்.
அப்போது சபையில் இருந்த 30 உறுப்பினர்களில், ஐதேக மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 22 பேர் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், யோகேஸ்வரன், சிறிதரன், கவீந்திரன் கோடீஸ்வரன், சாள்ஸ் நிர்மலநாதன், சிறிநேசன், சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகிய எட்டு பேர் மாத்திரமே எதிர்த்து வாக்களித்தவர்களாவர்.
அவசரகாலச்சட்ட நீடிப்பு வாக்கெடுப்பில் 194 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், உள்ளிட்டவர்களும் அடங்கியுள்ளனர்.