கடற்படைக்காக மண்டைதீவில் காணி சுவீகரிக்க தீவிர முயற்சி
யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலர் பிரிவில் கடற்படை முகாம் அமைப்பதற்கு 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் அளவுடைய காணி கையகப்படுத்தப்படவுள்ளது. அந்தக் காணி நாளை அளவீடு செய்யப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் காணிகள் 11 பேருக்குச் சொந்தமான காணிகளாகும். இந்தக் காணிகளை கையகப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
அதேவேளை கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காணி கையகப்படுத்துவது தொடர்பாகப் பேசப்பட்டிருந்தது.
அதில் கருத்துத் தெரிவித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைருமான மாவை சோ. சேனாதிராசா, யாழ்ப்பாண மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் ஒரு துண்டுக் காணியைக் கூடப் பாதுகாப்புத் தரப்பினர் கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தனர்.
கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன், எதிர்வரும் 11ஆம் திகதி மண்டைதீவுப் பகுதியில் 11 பேருக்குச் சொந்தமான காணிகளைக் கடற்படையினருக்கு வழங்குவதற்காக அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
அதற்குப் பதிலளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாராஜா, எமக்குத் தெரியாது எந்தக் காணிகளும் கையகப்படுத்துவதற்கு அனுமதி இல்லை. இது தொடர்பாக உரிய தரப்பினருடன் பேசுகின்றேன் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் காணி கையகப்படுத்துவதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமையால் காணி உரிமையாளர்கள் அச்சமைடைந்துள்ளனர். காணியைக் கையகப்படுத்துவதற்கான அளவீடு தொடர்பில் பிரதேச செயலர், கிராம அலுவலர் ஆகியோருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
காணி சுவீகரிப்புச் சட்டத்தின் இராண்டாம் பிரிவின்படி, நில அளவையாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் தொடர்பில் இதன்கீழ் கையொப்பம் இட்டிருக்கும் அரச நில அளவையாளர் கு.சுரேந்திரா ஆகிய நான் அவசியமான ஆளணியினருடன், வட மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் விஸ்தீரணம் உடைய காணியில் கடற்படை முகாம் அமைப்பதற்காகக் காணி சுவீகரிப்பதற்கான அளவீடு செய்வதற்காக 2019ஆம் ஆண்டு 04ஆம் மாதம் 11ஆம் திகதி 9 மணியளவிலும் தொடர்ந்து வரும் நாள்களிலும் அந்தக் காணிகளுக்குப் பிரவேசிப்பதற்குத் தீர்மானித்துள்ளேன் என்று தங்களுக்கு அறியத் தருகின்றேன் என்று அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.