ஓடும் விமானத்தில் அவசரகால வழியை திறந்த பெண் பயணி
விமானத்தில் அவசரகால வழியை கழிவறை என நினைத்து பெண் பயணி ஒருவர் திறந்ததால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு ‘பிகே 702’ என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
விமானத்தில் 40 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படத் தயாராகி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, பெண் பயணி ஒருவர், கழிவறை என நினைத்து, விமானத்தின் அவசரகால வழியை திறந்துவிட்டார்.
அதனால், பயணிகள் வெளியேறுவதற்கான சறுக்கு மிதவை விரிந்தது. விமான ஊழியர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திடீரென அவசரகால வழி திறந்ததால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
இதையடுத்து விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
சுமார் 7 மணி நேர தாமதத்துக்குப் பிறகு அந்த விமானம் மீண்டும் இஸ்லாமாபாத் புறப்பட்டு சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.