Main Menu

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு 

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ எனும் முன்மொழிவு நடைமுறைக்கு சாத்தியமற்றது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: “ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்குச் சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாததும், கூட்டாட்சியியலைச் சிதைப்பதும் ஆகும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சினைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாதது.

யதார்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடைஞ்சலை உருவாக்கும்.
இந்த முன்மொழிவு என்பதே மொத்தத்தில் பாஜகவின் ஆணவத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நகர்வுதானே ஒழிய, இதனை ஒருபோதும் அவர்களால் நடைமுறைப்படுத்த இயலாது. இந்திய ஜனநாயகம் ஒற்றைக் கட்சியின் பேராசைக்கு ஏதுவாக வளைக்கப்படலாகாது.
ஒன்றிய அரசானது இத்தகைய திசைதிருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஒப்புதல்: முன்னதாக, மக்களவைக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதன்பிறகு 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கைக்கு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று (புதன்கிழமை) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்: ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் குறித்து ஆலோசனை நடந்தபோது, 80 சதவீத மக்கள் இத்திட்டத் துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஏற்றது அல்ல. இது மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி. இத்திட்டம் வெற்றி பெறாது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இதுகுறித்து யாராவது எங்களிடம் கருத்து கேட்டார்களா? இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த 80 சதவீத மக்கள் யார் என நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்’’ என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.