உள்நாட்டுக்குள் தீர்வு கிடைக்கும் என்று எண்ணுவது இனிமேல் முட்டாள்தனம் – சிவசக்தி
ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு இனிமேலும் உள்நாட்டிற்குள் நீதியும் அரசியல் தீர்வும் கிட்டும் என்று இனியும் யாராவது நம்பினால் அது அவர்களின் அறிவின்மையின் வெளிப்படாகவே அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவே ஞானசார தேரரை ஜனாதிபதி விடுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரரின் விடுதலை குறித்து இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பத்தொன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர் ஒன்பது மாதங்களில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் என்ன குற்றத்திற்காகச் சிறையில் இருக்கிறோம் என்பதே தெரியாத பல தமிழ் அரசியல் கைதிகள் இருபதாண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
இந்நாட்டின் அரசியல் அமைப்பும், சட்டமும் சிங்களவர்களுக்கு ஒரு விதமாகவும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு விதமாகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். இதைப்போல் பல உதாரணங்களை சுட்டிக்காட்டமுடியும்.
இந்த நாட்டில் சிங்கள பௌத்த பேரினவாதிகளைத் தவிர ஏனையோர் அடிமைகளாக வாழ வேண்டும் என்பது புலனாகிறது. ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு இனிமேலும் உள்நாட்டிற்குள் நீதியும் அரசியல் தீர்வும் கிட்டும் என்று இனியும் யாராவது நம்பினால் அது அவர்களின் அறிவின்மையின் வெளிப்படாகவே அமையும்.
அத்துடன், ஞானசார தேரரை விடுவித்தால் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை அவரை வைத்து அரசியல் செய்யும் சில அரசியல் தலைவர்களின் செல்வாக்கைக் குறைக்க முடியும் என்று ஜனாதிபதி நம்பியிருக்கலாம். சிங்கள மக்களின் முழுமையான வாக்குகளை உறுதி செய்துகொண்ட பின்னரே தமிழ் மக்கள் மீது கவனம் செலுத்தப்படும்.
சிங்கள மக்களின் வாக்கு வங்கியில் ஏற்படும் வீழ்ச்சியினூடாகவே தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக அமையும். எனவே சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதே தற்போது ஜனாதிபதிக்குள்ள ஒரே தெரிவு. இலங்கையில் ஒரு போதும் சமமான நீதி, சமத்துவமான ஆட்சி நேர்மையான சட்டவாட்சி என்பனவற்றை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்.
ஜனாதிபதி தானே தாயை இழந்து தவிக்கும் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளிடம் உங்களது தந்தை விரைவில் வீடு திரும்புவார் உங்களது உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு அவரே அதனை மீறியிருக்கிறார்.
இத்தனைக்கும் அவர் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதைத் தீர்மானிக்கும் சக்திகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக தமிழ்த் தேசிய இனம் இருந்திருக்கிறது. அதற்காகவேணும் அவர் ஆனந்த சுதாகரனை விடுவித்திருக்கலாம். அல்லது தான் வாக்குறுதி அளித்ததற்காகவாவது விடுவித்திருக்கலாம். ஆனால் எதுவும் நடக்கவில்லை” என்று தெரிவித்தார்.