உலக பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் – அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது
உலகின் பணக்கார நாடுகளான சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் சொத்துக்களில் மூன்றில் இரண்டு மடங்கு 10 சதவீத குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது.
உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது.
உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000-ம் ஆண்டு 156 லட்சம் கோடி டாலராக இருந்தது. அது 2020-ம் ஆண்டில் 514 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனா காரணமாக இருந்துள்ளது.
இதன் மூலம் சீனா நாட்டின் சொத்து மதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து இருக்கிறது. உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக சீனா ஆவதற்கு முன்பு 2000-ம் ஆண்டில் அந்நாட்டின் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டாலராக இருந்தது.
2020-ல் சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதனால் உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 90 லட்சம் கோடி டாலராக உள்ளது. உலகின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கு மேல் 10 நாடுகளிடம் மட்டுமே உள்ளது.
மேலும் உலகின் பணக்கார நாடுகளான சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் சொத்துக்களில் மூன்றில் இரண்டு மடங்கு 10 சதவீத குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகின் சொத்து மதிப்பில் 68 சதவீதம் ரியல் எஸ்டேட்டில் உள்ளது. மற்றவைகள் உட்கட்டமைப்பு, இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் மிகக் குறைவாகவே அறிவு சார் சொத்துக்கள், காப்புரிமைகளில் உள்ளன.