உலகில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 141வது இடம், இலங்கை 72வது இடம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொது நல அமைப்பு ஒன்று 2019ம் ஆண்டில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை உலக நாடுகளில் நிலவும் உள்நாட்டு பிரச்னைகள், மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட 23 காரணிகளை வைத்து அமைதி நிலைமையை கணக்கிடுகிறது.
இந்தாண்டிற்கான பட்டியலில் ஐஸ்லாந்து உலகிலேயே அமைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக இந்நாடு இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து, ஆஸ்த்ரியா, போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் அடுத்த 4 இடங்களை வகிக்கின்றன. மொத்தம் 163 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் இந்தியா கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 5 இடங்கள் பின் தங்கி 141வது இடத்திற்கு சென்றுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் இலங்கை 72வது இடத்திலும் நேபாளம் 76வது இடத்திலும் பங்களாதேஷ் 101வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 153வது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் உலகிலேயே அமைதி மிகவும் குறைவாக உள்ள நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது, இதற்கு முந்தைய இடங்களில் தெற்கு சூடான், ஏமன், ஈராக், சிரியா ஆகியவை உள்ளன.
இந்த அறிக்கை உலகளவில் அமைதியான சூழல் கடந்த ஐந்தாண்டில் முதல் முறையாக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிக்கை பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா, ஜப்பான்,பங்களாதேஷ்,மியான்மர், சீனா,இந்தோனேஷியா,பிலிபைன்ஸ்,வியட்நாம்,பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.