உக்ரைனில் மனநல மருத்துவமனையில் தீ விபத்து – 6 பேர் உடல் கருகி பலி
உக்ரைனில் மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.
உக்ரைனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகர் ஓடேசா. நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான இங்கு அரசுக்கு சொந்தமான மனநல மருத்துவமனை இயங்கி வருகிறது. 2-ம் உலகப்போர் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்று மனரீதியில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, மேற்கூரை வழியாக பிற தளங்களுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். அதே சமயம் மருத்துவமனையில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் காயங்கள் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.