ஈஃபிள் கோபுரம் – 130வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்வுகள்
ஈஃபிள் கோபுரத்தின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை மே 15 ஆம் திகதியில் இருந்து, நாளை மே 16, நாளை மறுதினம் மே 17 ஆகிய திகதிகளில் ‘லைட் ஷோ’ எனப்படும் ‘ஒளி நிகழ்ச்சியை’ நீங்கள் Trocadero முற்றத்தில் இருந்தோ, அல்லது Jana மேம்பாலத்தில் இருந்தோ கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களில் ஈஃபிள் கோபுரத்தின் வரலாற்றினை 12 நிமிட நிகழ்வாக ஒளிரச் செய்ய உள்ளனர்.
ஈஃபிள் கோபுரத்தில் இலேசர் மின் விளக்குகளால் இந்த வரலாறு காண்பிக்கப்பட உள்ளது. இன்று புதன்கிழமை இந்த நிகழ்வினை 22:00 மணிக்கு பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ ஆரம்பித்து வைக்கின்றார். இந்த ‘ஒளி நிகழ்ச்சியை’ பிரபல scenography இயக்குனர் Bruno Seillier மேற்கொள்ள உள்ளார். இவர் முன்னதாக 2017, 2018 ஆம் ஆண்டுகளில் நோர்து-டேம் தேவாலயத்தில் La Nuit aux Invalides மற்றும் the show Dame de coeur ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தவராவர்.