Main Menu

இஸ்ரேலின் தாக்குதலால் 2,000 பேர் உயிரிழப்பு

லெபனானில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 250 ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்பு தரப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 21 பேர் விசேட இராணுவத் தளபதி தரத்தைக் கொண்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிலைகள் தாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லெபனான் பிரதேசத்திலேயே இராணுவ நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் இரவு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹெஸ்புல்லாவின் அடுத்த தலைவர் எனக் கருதப்படும் ஹஷெம் சபிட்டைன் குறிவைக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் அவரின் நிலை குறித்தோ அல்லது மேலதிக விபரங்களோ உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, லெபனானிலிருந்து சிரியாவிற்குச் செல்லும் நெடுஞ்சாலை ஒன்று நேற்று முன் தினம் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அந்த பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலையின் ஊடாகவே ஆயுதங்கள் கடத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த நாட்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 127 சிறுவர்களும் 261 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.