இரு சமூகத்தினரும் ஒன்றிணைந்த புத்தாண்டாக இம்முறை அமையும் – சந்திரிகா
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2019/04/Chandrika-Bandaranaike.jpg)
இரண்டு சமூகத்தினரும் இணைந்த புத்தாண்டாக இந்த ஆண்டுப் புத்தாண்டு அமையும் என்று முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம், தேசிய ஒருமை பாட்டுக்கும் நல்லிணத்துக்குமான அலுவலகம், அரச கரும மொழிகள் அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இதுவரை காலமும் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் தங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை தனித் தனியாக கொண்டாடினார்கள். ஆனால் இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு ஒரு நிகழ்வின் மூலம் இரண்டு இன மக்களும் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டங்களைச் செய்கிறார்கள்.
அனைத்து மத இனத்தவர்களும் இங்கு வந்துள்ளனர்.ஒரு இனத்தின் கலாசாரத்தை ஏனைய இன மாணவர்கள், மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதுவரை சண்டை இட்டது போதும். இனிமேல் சமாதானமாக வாழ வேண்டும்.
இங்கு நடைபெறும் நிகழ்வு ஒரு சமாதானத்துக்கானது. இங்கு வந்துள்ள ஆசிரியர்கள் இந்த சமாதானச் செய்தியை மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். நாம் அனைவரும் ஒரே இனம்தான் .இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் – என்றார்.
தமிழ்–சிங்கள பாரம்பரிய நடனங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன. தமிழ் – சிங்கள புத்தாண்டு கலாசாரம், பழக்க வழக்கத்தை பிரதி பலிக்கும் வகையில் மைதானத்தில் ஓலை மண் வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. மாட்டு வண்டில், துலா போன்ற பல்வேறு பாரம்பரிய அம்சங்களை உள்ளடங்கிய வீடுகளாக அவை அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர் கலாசாலை மாணவர்கள், கலைஞர்கள், அரச அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
பகிரவும்...