ஆந்திர முதல்வராக பொறுப்பேற்று, சாசனத்தில் கையெழுத்திட்டார் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டி, இன்று முறைப்படி முதல்வராக பொறுப்பேற்றார்.
ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி அம்மாநிலத்தின் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி அபாரமான வெற்றிப் பெற்றது.
அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, முதல் மந்திரியாக பதவியேற்றார். இதையடுத்து கட்சி கூட்டத்தில் நாட்டிலேயே முதல் முறையாக 5 பேரை துணை முதல்வராக நியமித்தார். மேலும் 25 கேபினட் அமைச்சர்களையும் தேர்வு செய்ய முடிவெடுத்தார்.
அவர்களின் பதவிக்காலம் 30 மாதங்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற நாள் முதலே, அதிரடி நடவடிக்கைகளால் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று காலை முறைப்படி அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டு முதல்வராக பொறுப்பேற்றார்.
முன்னதாக அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெகனின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து தலைமை செயலக அதிகாரிகள், ஊழியர்கள் வரிசையில் நின்று ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.