அவசரகால சட்டத்தை நீடிக்க அனுமதிக்கக்கூடாது
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பிலிருந்தும் எழுந்திருக்கின்றது. குண்டுத்தாக்குதல்களை அடுத்து குற்ற வாளிகளைக் கைதுசெய்வதற்காகவும் எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் உடனடியாகவே அவசரகால சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது.
குண்டுத்தாக்குதலில் 250 அப்பாவி பொதுமக்கள் பலியானதுடன் 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். தாக்குதல்கள் காரணமாக நாடே அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. பேரிழப்புக்களைச் சந்தித்த மக்கள் அச்சத்திலும் பதற்றத்திலும் துவண்டுபோயினர். இந்த நிலையிலேயே அவசரகால சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடனப்படுத்தினார். இந்த சட்டம் மீது பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அன்றைய சந்தர்ப்பத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதனால் ஏகமனதாக அவசரகால சட்டத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அதன் பின்னணியில் செயற்பட்டோர் குறித்தும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்னமும் கைதுகளும் தடுத்து வைப்புக்களும் தொடர்ந்து வருகின்றன. நாட்டில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கை கள் நீடித்து வருகின்றன. எங்கும் எவரையும் எந்தவேளையிலும் கைதுசெய்வதற்கான அதிகாரம் படைத்தரப்பினருக்கு வழங்கப்பட்டிருக் கின்றது.
இவ்வாறு படைத்தரப்பினருக்கு அவசரகால சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் உரிய வகையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சில இடங்களில் அவசரகால சட்டத்தின் மூலமான அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நாட்டில் பொலிஸார் மற்றும் படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. பல இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கைப் பொறுத்தவரையில், அங்கு கிழக்கு உட்பட ஏனைய மாகாணங்களை விடவும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களைச் சந்தித்து வருவதாகவும் முறையிடப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர்கள் காத்தான்குடியை மையப்படுத்தியே தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில் கிழக்கு மாகாணத்தில் கூட இல்லாத சோதனை கெடுபிடிகள் வடக்கில் வேண்டுமென்றே முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவசரகால சட்டத்தை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ். சிறிதரன் உட்பட பலரும் அவசரகால சட்டத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் சோதனை கெடுபிடிகள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இங்கு உரையாற்றிய தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,
“அவசரகால சட்டத்தின் கீழ் வடக்கில் நடக்கும் மோசமான சோதனை செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தென்னிலங்கையைவிடவும் வடக்கில் இவ்வாறு மோசமான சோதனைகள் இடம் பெறுகின்றமைக்கான காரணம் என்ன” என்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவசரகால சட்டத்தை மீண்டும் ஒரு மாதம் நீடிக்கும் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை இலங்கையில் அழித்தொழிக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்காக இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். முன்பு வேண்டாமென கைவிடப்பட்ட விதிகள் கூட இப்போது மீண்டும் அவசரகால சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அவசரகால சட்டத்தை கொண்டுவருவது என்றால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளை அழைத்து ஜனாதிபதி பேசியிருக்கவேண்டும். அவசரகால சட்டத்தினால் தமிழ்ப் பிரதேசங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தென்னிலங்கையில் மேற்கொள்ளாத சோதனை நடவடிக்கைகள் வடக்கில் இடம்பெறுகின்றன. எமது மாணவர்கள் பாடசாலைகளில், பேருந்துகளில் சோதனையிடப்படு வதுடன் இன்னும் பல சோதனைகளும் இடம்பெறுகின்றன. எனவே அவசரகால சட்டத்தை நீடிக்க இனியும் அனுமதிக்க முடியாது என்றும் மாவை சேனாதிராஜா எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோன்றே பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன், கோடீஸ்வரன் உட்பட பலரும் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். அன்றைய தினம் அவசரகால சட்டத்திற்கு எதிராகவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வாக்களித்திருந்தது. கூட்டமைப்பு வாக்கெடுப்பை கோரியதையடுத்து சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவசரகால சட்ட நீடிப்புக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
உண்மையிலேயே அவசரகால சட்டத்தினால் திட்டமிட்டவகையில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்களேயானால் அதற்கு அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் கூட்டமைப்பினரின் செயற்பாடு சரியானதாகவே அமைந்திருக்கின்றது. ஆனாலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் தற்போது அக்கறை செலுத்தவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. சர்வதேச பயங்கரவாதிகளான ஐ. எஸ். அமைப்பினரின் தாக்குதலை அடுத்து நாடு பெரும் பதற்றத்திற்குள் சிக்கியுள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கும் வகையிலும் பயங்கரவாதிகளி ஊடுருவலை முற்றாக ஒழிக்கும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளன. இந்த நிலையில் பொலிஸாருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டியது இன்றியமையாததாக உள்ளது. இதனால்தான் கடந்த மாதம் 24 ஆம்திகதி அவசரகால சட்டம் நாட்டில் உடனடியாக அமுல்படுத்தப்பட்ட வேளை, அதற்கு சபையில் ஏகமனதான அங்கீ காரம் வழங்கப்பட்டது.
ஆனாலும் வடக்கை மையப்படுத்தி பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டமையின் காரணமாகவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது இந்தச் சட்டத்தை எதிர்க்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. கடந்த மூன்று தசாப்தகாலமாக பயங்கரவாத தடைச்சட்டமும் அவசரகால சட்டமும் நாட்டில் நீடித்துவந்தன. யுத்தம் இடம்பெற்றபோது, அவசரகால சட்டத்தினால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்தனர். சொல்லொண்ணாத் துன்பங்களை அவர்கள் அனுபவித்து வந்தனர். தமிழர்கள் அனைவரும் புலிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். தற்போது தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை அடுத்து முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலைமை உருவாகியிருக்கின்றது. தாக்குதல்தாரிகள் என்ற சந்தேகத்தின் பேரிலும் அவர்களுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் பலநூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெருந்தொகையினர் அப்பாவிகளாகவும் உள்ளனர்.
எனவே அவசரகால சட்டம் அமுலில் இருக்கின்றது என்பதற்காக முஸ்லிம் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்ற கோணத்தில் எவரும் பார்க்கக்கூடாது. தற்போதைய நிலையில் அவசரகால சட்டத்தைத் தொடர்ந்தும் நீடிப்பதற்கான உத்தேசம் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். வெளிநாட்டு இராஜதந்திரிகளை நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு அவசரகால சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்கின்றது. மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என்று, தான் நம்புவதாக ஜனாதிபதி இந்த சந்திப்பின்போது எடுத்துக் கூறியிருக்கின்றார்.
இதேபோன்றே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கடந்த வாரம் வெளிநாட்டு தூதுவர்களைச் சந்தித்து நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் சுற்றுலாப் பயணிகளுக்கான தடையை வெளிநாடுகள் நீக்கவேண்டும் என்றும் கோரியிருக்கின்றார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்களிலிருந்து அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்பது புலனாகின்றது. அவசரகால சட்டத்தை நீக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் கோரியுள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அவசரகால சட்டத்தை நீக்கிவிட்டு நிரந்தரமான புதிய சட்டம் உருவாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எனவே நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதுடன் அவசரகால சட்டத்தை நீக்கி, மீண்டும் நாட்டில் சகஜ நிலையை ஏற்படுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.