Main Menu

அமரர் இரா.சம்பந்தனுக்கு இரங்கல் – பூதவுடல் அஞ்சலிக்காக புதன்கிழமை பாராளுமன்றில்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(30) இயற்கை எய்தினார்.

அன்னாருக்கு 91 வயதாகின்றது என்பதுடன் பூதவுடல் எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அரைநூற்றாண்டு காலம் சேவையாற்றிய சம்பந்தனின் மறைவு கவலையளிப்பதாகவும் இது ஒரு சகாப்தத்தின் முடிவாகும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைக்கான அவரது அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும் எனவும் சம்பந்தனின் நேர்மையான மற்றும் நியாயமான தலைமைத்துவம் தனக்கும் பலருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்குமெனவும் சஜித் பிரேமதாச தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் தமது பழைய நண்பர் எனவும் பல நாட்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விவாதித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜனநாயகம் மற்றும் அதிகாரப்பகிர்வு மீதான சம்பந்தனின் உறுதியான நம்பிக்கை எப்போதும் “பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள்” என்றென்றும் எதிரொலிக்கும் என இலங்கை வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அவரது நினைவாக அனைத்து இலங்கையர்களும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு நாட்டை கட்டியெழுப்ப பாடுபடவேண்டுமெனவும் நாட்டின் பன்முகத்தன்மைக்கான வலிமையின் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன் தனது 6 தசாப்த அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து அதன் தூணாகவும் இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராகவும் இருந்து வந்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்பட்டுள்ள சம்பந்தனின் மறைவு மிகுந்த கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும் இலங்கையின் எழுச்சியூட்டும் மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் இருந்தார் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கைக்குள் இணக்கமான, அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்காக உழைத்த மூத்த தமிழ் அரசியல்வாதியான ஆர்.சம்பந்தனின் மறைவு மிகுந்த கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினரின் சம உரிமைகளுக்கான அவரது வாதங்கள் அனைத்து இலங்கை பிரஜைகளுக்குமான பரந்த மனித உரிமைகளை மேம்படுத்த உதவிபுரிந்ததுடன் ஒற்றுமையை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவால் துயரடையும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை தாம் எப்போதும் நினைவுகூர்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தமிழ் பேசும் மக்களுக்காக அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை அவர் பின்பற்றியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தமிழ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவு தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...