அசாஞ்ச் நாடு திரும்ப முடியும் – அவுஸ்ரேலிய பிரதமர்!
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை நாடுகடத்தும் அமெரிக்காவின் முயற்சி பிரித்தானிய நீதிமன்றத்தில் தோல்வி அடைந்தால் அவர் தடையின்றி நாடு திரும்ப முடியும் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
அசாஞ்ச் மீதான உளவு பார்த்த குற்றச்சாட்டை கைவிடும்படி அவுஸ்ரேலிய நாடாளுமன்றம் அமெரிக்காவை கேட்டுக்கொண்டுள்ளது.
அசாஞ்சை நாடுகடத்தும் அமெரிக்காவின் கோரிக்கையை பிரித்தானிய நீதிபதி ஒருவர் கடந்த திங்கட்கிழமை தடுத்த நிலையிலேயே அவுஸ்ரேலிய பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உளவுச் சட்டங்களை மீறியது உட்பட அசாஞ்ச் மீது பல குற்றவியல் குற்றச்சாட்டுகளும் சுமுதப்பட்டுள்ளன. எனினும் இது அவரை தற்கொலைக்குத் தூண்டக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என அமெரிக்க அரசாங்கம் சார்பிலான வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் இந்த வழக்கு பிரித்தானிய உச்சநீதிமன்றத்திற்கு செல்லவுள்ளது. இந்த வழக்கு நடைமுறைகளுக்கு மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என கூறப்படுகிறது.
விக்கிலீக்ஸ் இணைதளம் அமெரிக்காவின் இராஜதந்திர மற்றும் இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.