Main Menu

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டில் தற்சமயம் நிலவும் பொருளாதார நிலவரத்துக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களின் மக்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து, அப்பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன. குறிப்பாக, எரிபொருள் விலை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களும், தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில் மக்களின் வருமான மட்டம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் உழைக்கும் மக்களின் குடும்பப் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உழைக்கும் மக்களுக்கு நிலவும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் மற்றும் சுகாதாரம், கல்வித் துறைகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டது. தரமான சுகாதாரச் சேவைகளைப் பெறுவதற்கான அணுகல், பாடசாலைக் கல்வியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் பிள்ளைகளின் போசாக்கு நிலை தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தாஹிர் மரிக்கார், துரைராசா ரவிகரன், ஜி. ஜி. பொன்னம்பலம், ஜி. ஸ்ரீநேசன், எம். எஸ். உதுமா லெப்பே, கே. காதர் மஸ்தான், டாக்டர் பி. சத்தியலிங்கம் மற்றும் ஹபீப் ரிபான் ஆகியோர் கலந்து கொண்டனர்.