ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும் போது எதிர்க்கட்சிகள் ஏன் அமைதி காக்கின்றன? – விமல் வீரவன்ச விசனம்
அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் கடுமையான அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் மௌனம் காக்கின்றன. நாட்டின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும்போது எதிர்க்கட்சிகள் ஏன் அமைதி காக்கின்றன? என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச விசனம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னைய ஆட்சிக்காலங்களில் அடக்குமுறைச் சட்டங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அரசியல் இயக்கம் ஒன்று, தற்போது தமக்குள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, மேலும் கொடூரமான சட்டங்களை நிறைவேற்றி அரசியலமைப்புச் சார்ந்த சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறது.
22ஆவது திருத்தச்சட்டம் மூலமாக நாட்டின் நீதித்துறை அமைப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத் திருத்தங்கள் சாதாரண மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், ஊடகச் சுதந்திரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
அரசாங்கத்தின் இத்தகைய மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராகப் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் வீரியமான தலைமையை வழங்கத் தவறியுள்ளதன் காரணமாகவே பொதுமக்களுக்கு இதன் தீவிரத் தன்மை குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.
நாட்டின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும்போது எதிர்க்கட்சிகள் ஏன் அமைதி காக்கின்றன? எதிர்க்கட்சி பாராளுமன்றக் உணவகத்தில் மட்டுமே குரலை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்றார்.
