ஊவா மாகாண முன்னாள் முதல்வர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிரான ஊழல் வழக்கு :மேலதிக விசாரணை ஒத்திவைப்பு!
ஊவா மாகாண முன்னாள் முதல்வரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன இன்று (04) உத்தரவிட்டார்.
ஊவா மாகாணத்தில் உள்ள முன்பள்ளிகளுக்கு பைகள் வழங்குவதற்காக சட்டவிரோதமான முறையில் 10 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டார் எனக் கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் சாட்சிய விசாரணை இன்று (04) ஆரம்பமானதுடன், இதன்போது முறைப்பாட்டாளரின் 6ஆவது சாட்சியாளரான இலங்கை வங்கியின் பதுளைக் கிளையின் பிரதிப் முகாமையாளர் சாட்சியமளித்தார்.
அத்துடன், எதிர்வரும் வழக்குத் தவணையன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு முறைப்பாட்டாளரின் 13ஆவது சாட்சியாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
