Main Menu

சவப் பெட்டியிலிருந்து விழித்தெழுந்த 15 வயது சிறுமி!

குவாத்தமாலாவில் கடுமையான மார்பு வலியால் மயக்கமடைந்த 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துவிட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் தவறுதலாகக் கருதி இறுதிச்சடங்குகளுக்கு ஏற்பாடு செய்த நிலையில், சவப்பெட்டிக்குள் இருந்த சிறுமி 8 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் விழித்தெழுந்த விசித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குவாத்தமாலாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமிக்கு கடுமையான மார்பு வலி ஏற்பட்டதையடுத்து, அவரது தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்திருந்தார். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சிறுமி திடீரென மயக்கமடைந்துள்ளார்.

இதன்போது சிறுமியின் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு நின்றுவிட்டதாகக் கருதிய தந்தை பதற்றமடைந்து, மருத்துவமனைக்குச் செல்லாமல் சிறுமி உயிரிழந்துவிட்டதாகத் தானாகவே முடிவு செய்துள்ளார்.

இதற்கமைய, எந்தவொரு மருத்துவப் பரிசோதனையோ அல்லது அதிகாரப்பூர்வ மரண சான்றிதழோ இன்றி, குடும்பத்தினர் சவப்பெட்டி ஒன்றை விலைக்கு வாங்கி வீட்டில் இறுதிச்சடங்குகளை ஆயத்தம் செய்துள்ளனர்.

இறுதிச்சடங்கின் போது சவப்பெட்டிக்குள் அசைவுகள் தென்பட்டுள்ளன. சுமார் 8 மணி நேரத்திற்குப் பிறகு சிறுமி சவப்பெட்டிக்குள்ளேயே கண்களைத் திறந்து இயல்பு நினைவுக்கு வந்துள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாகச் செயல்பட்டு சிறுமியைச் சவப்பெட்டியிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிறுமி, தான் மயக்கமடைவதற்கு முன்னர் தனக்குக் கடுமையான மார்பு வலி ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.