அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்கு திட்டமில்லை – ஈரான் தெரிவிப்பு!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பங்கேற்கும் ஈரானியக் குழுவினர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடவில்லை என்று தெஹ்ரானின் அரசு ஊடகம் திங்களன்று (28) தெரிவித்தது.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் பேச்சுவார்த்தைகளை எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார்.
ஹார்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவை நிராகரித்த மறுநாளான ஞாயிறன்று, பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கும் என்று ட்ரம்ப் ‘ஆக்சியோஸ்’ (Axios) ஊடகத்திடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், நியூயோர்க்கில் உள்ள ஈரானியக் குழுவிற்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று, அக்குழுவிற்கு நெருக்கமான பெயர் குறிப்பிடப்படாத ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ (IRNA) தெரிவித்துள்ளது.
கட்டார் மத்தியஸ்தர் ஒருவர் வழியாக, ஈரானின் கருத்துக்களும் நிலைப்பாடுகளும் அமெரிக்கத் தரப்புக்குத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கப்பட்டன என்று ஐஆர்என்ஏ கூறியதுடன், ஈரானிய தூதுக்குழு செவ்வாய்க்கிழமை தெஹ்ரானுக்குத் திரும்பும் என்றும் தெரிவித்தது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் போர் தொடங்குவதற்கு முன்பு கடந்து சென்ற முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணைப்பை மீண்டும் திறப்பதற்கும் ஏழு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் தொடங்கிய மோதலின் மையப்புள்ளியாக இந்த நீரிணைப்பு அமைந்துள்ளது.
அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் இந்த நீரிணைப்பின் மீதான கட்டுப்பாட்டை இறுக்கியது.
அதற்குப் பதிலடியாக வாஷிங்டன் ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டது.
இஸ்ரேலால் தொடர்ந்து குண்டுவீச்சுக்கு உள்ளாக்கப்படும் தனது பங்காளியான ஹிஸ்புல்லா அமைப்புள்ள லெபனான் உட்பட, மத்திய கிழக்கு முழுவதும் ஏழு நாள் போர்நிறுத்தத்தை ஈரான் கோருகிறது.
மேலும், தனது வெளிநாட்டுச் சொத்துக்களை முடக்குவதை நீக்குதல், தனது எண்ணெய் துறை மீதான தடைகளை நீக்குதல் மற்றும் அமெரிக்கக் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றையும் அது கோருகிறது.
சனிக்கிழமையன்று ட்ரம்ப் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தார்.
எனினும், செப்டம்பர் 1 முதல் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தாததால் சண்டை மீண்டும் குறைந்துள்ளது; இருப்பினும், ஹார்முஸ் நீரிணயைில் கப்பல்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
