இலங்கையில் அதிகரித்து வரும் பிரிந்து வாழும் தம்பதிகள்: 2024 கணக்கெடுப்பில் தகவல்
இலங்கையில் சட்டப்பூர்வமாகப் பிரிந்தவர்கள் மற்றும் சட்டப்பூர்வமின்றிப் பிரிந்தவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2024 சனத்தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் திருமண நிலை குறித்த முக்கியத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கணக்கெடுப்பின்படி நாட்டில் 10,512,344 ஆண்களும், 11,269,456 பெண்களும் உள்ளனர். இவற்றில் மொத்தம் 5,417,431 ஆண்களும், 5,743,647 பெண்களும் திருமணமான நிலையில் உள்ளனர்.
ஆண்களில் 4,808,324 பேரும், பெண்களில் 4,291,826 பேரும் ஒருபோதும் திருமணம் செய்யாதவர்கள் எனப் பதிவாகியுள்ளனர்.
பெண்களில் 1,058,997 பேர் கைம்பெண்களாக உள்ளனர், இது ஆண்களின் எண்ணிக்கையை (175,421) விட கணிசமாக அதிகமாகும்.
15 வயதிற்குட்பட்ட பிரிவில் 18 பெண்கள் திருமணமானவர்களாகப் பதிவாகியுள்ளனர். 15-19 வயதுக்குட்பட்ட பிரிவில் 8,458 ஆண்களும் 30,199 பெண்களும் திருமணமானவர்களாக உள்ளனர்.
சட்டப்பூர்வமாகப் பிரிந்தவர்கள் மற்றும் சட்டப்பூர்வமின்றிப் பிரிந்தவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் உள்ளனர்.
இலங்கையின் 2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பின்படி, திருமணமான நிலையில் இருந்து பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழ்பவர்கள் தொடர்பான விரிவான புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் பிரிந்து வாழ்பவர்கள் சட்டப்பூர்வமாகப் பிரிந்தவர்கள் மற்றும் சட்டப்பூர்வமின்றிப் பிரிந்தவர்கள் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
1. சட்டப்பூர்வமாகப் பிரிந்தவர்கள்
இவர்கள் நீதிமன்ற உத்தரவு அல்லது முறையான சட்ட வழிமுறைகள் மூலம் பிரிந்து வாழ்பவர்கள் ஆவர். இலங்கையில் மொத்தம் 44,904 பேர் சட்டப்பூர்வமாகப் பிரிந்து வாழ்கின்றனர்.
இதில் ஆண்களின் எண்ணிக்கை 17,047 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 27,857 ஆகவும் காணப்படுகிறது. பெண்களே ஆண்களை விட அதிகளவில் சட்டப்பூர்வமாகப் பிரிந்து வாழ்கின்றனர்.
35-39 வயதுடைய பிரிவில் அதிகபட்சமாக 5,912 பேர் சட்டப்பூர்வமாகப் பிரிந்துள்ளனர். குறைந்தபட்சமாக 15-19 வயதுடையவர்களில் 41 பேர் மாத்திரமே இவ்வாறான நிலையில் உள்ளனர்.
2. சட்டப்பூர்வமின்றிப் பிரிந்தவர்கள்
பரஸ்பர சம்மதத்துடன் அல்லது வேறு காரணங்களுக்காக முறையான சட்டப் பிரிவினை இன்றித் தனியாக வாழ்பவர்கள் இதில் உள்ளடங்குவர்.
இலங்கையில் மொத்தம் 166,895 பேர் சட்டப்பூர்வமின்றிப் பிரிந்து வாழ்கின்றனர். இது சட்டப்பூர்வமாகப் பிரிந்தவர்களின் எண்ணிக்கையை விட சுமார் 3.7 மடங்கு அதிகமாகும்.
இதில் ஆண்கள் 65,169 பேரும், பெண்கள் 101,726 பேரும் அடங்குகின்றனர். இங்கும் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.
40-44 வயதுடைய பிரிவில் அதிகபட்சமாக 25,616 பேர் இவ்வாறு பிரிந்து வாழ்கின்றனர்.
வயது அதிகரிக்கும் போது (65 வயதிற்கு மேல்), இந்தப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது.
இந்தத் தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் விவாகரத்து பெற்றவர்களை (74,355 பேர்) விட, விவாகரத்து பெறாமல் சமூக அல்லது சட்ட ரீதியாகப் பிரிந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை (211,799 பேர்) மிக அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
