Main Menu

விமான நிலையத்தில் 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் அவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான AI-277 என்ற விமானம் மூலம் அவர் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரது பயணப் பொதியிலிருந்த சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ 340 கிராம் நிறையுடைய ‘குஷ்’ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதானவர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் 45 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த பயணி மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட
போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.