“தமிழகத்தில் தவெக, அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்” – கே.பாலகிருஷ்ணன்
“தமிழகத்தில் விஜய்யின் தவெக மற்றும் அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராஜாங்கத்தை ஆதரித்து லாஸ்பேட்டை உழவர் சந்தை எதிரில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும், உழவர்கரை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் நாரா கலைநாதனுக்கும், திருபுவனை தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் வேட்பாளர் தட்சிணாமூர்த்திக்கும் கே.பாலகிருஷ்ணன் திறந்த வாகனத்தில் சென்று தனித்தனியாக வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை. மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் கூட இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. தொழில் வளர்ச்சி அற்ற மாநிலமாகவே புதுச்சேரி உள்ளது. இரட்டை இஞ்சின் ஆட்சி என்று சொல்லி பல ஆயிரம் கோடி போலி மருந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கி ஊழல் செய்ததுதான் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசின் மிகப் பெரிய சாதனை” என்றார்.
போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எப்படி ஜாமீனில் வெளியே வந்தார்கள்? வாக்குச் சேகரிக்கும்போது முதல்வர் ரங்கசாமி தன்னுடைய ஆட்சியின் சாதனையாக இதையெல்லாம் சொல்லிக் கேட்க வேண்டும். ஓர் அதிகாரியைக் கூட மாற்ற தனக்கு அதிகாரம் இல்லையென்று கூறிய முதல்வர் ரங்கசாமி, நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக அமர்ந்தால் இந்த அதிகாரம் எல்லாம் கிடைத்துவிடுமா? பெயருக்கு வேண்டுமென்றால் முதல்வராக இருக்கலாம். ஆட்சி, அதிகாரம் எல்லாலம் பாஜகவிடம்தான் இருக்கும்.
