பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை
அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, ஆறு மாதங்களாக பங்களாதேஷ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.
இதற்கு அமைவாக இந்த மீனவர்கள் குழு நாளை (02) காலை நாடு திரும்புவார்கள் என்று இலங்கை கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மீனவர் குழு 2025 ஜூலை 16 அன்று, ‘Sudu Duwa 4‘ என்ற பல நாள் மீன்பிடிப் படகில் பயணம் மேற்கொண்டது.
பின்னர் கடல் எல்லைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் பங்களாதேஷ் கடற்படையால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பங்களாதேஷில் உள்ள சிட்டகாங் மத்திய சிறையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, வெளிவிவாகர அமைச்சு மற்றும் பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்ட வெற்றிகரமான இராஜதந்திர தலையீடுகளின் பின்னணியில் இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது.
