Main Menu

கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு இன்றைய தினம் நேரில் சென்ற ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவன் தெ.திருக்குமரன் கணிதப் பிரிவில் தேசிய நிலையில் சாதனை படைத்துள்ள அதேவேளை,  கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் ஆ.கிரிஷாந்த் மற்றும் வர்த்தகப் பிரிவில் க.மதுமினி ஆகியோர் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தச் சாதனை மாணவர்களை ஆளுநர் பாராட்டியதுடன்,  இவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த பெற்றோர், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தமது கடின உழைப்பாலும் சுயமுயற்சியாலும் மாபெரும் வெற்றியீட்டிய மாணவர்களைப் பாராட்டிப் பேசிய ஆளுநர், ‘கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாணவரொருவர் தேசிய நிலையில் முதலிடம் பெற்றுள்ளமை, மாகாணத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது’ எனக் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், ‘இந்தச் சாதனை மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதோடு, எதிர்காலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டும்’ எனவும்
வலியுறுத்தினார். அத்துடன், இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் ஆளுநர் வெகுவாகப் பாராட்டினார்