ஈரானியக் கப்பல் ‘IRIS Bushehr’: இயந்திரக் கோளாறால் கொழும்பு கடற்பரப்பில் நங்கூரம்
இலங்கை கடற்பரப்பிற்குள் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியுள்ள ஈரானியக் கப்பல் தொடர்பான புதிய தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் பகிர்ந்துள்ளார்.
ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr என்ற கப்பலைத் திட்டமிட்டபடி திருகோணமலை துறைமுகத்திற்கு இன்னும் கொண்டு செல்ல முடியவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் இன்று (மார்ச் 19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கோளாறு காரணமாகவே அதனைத் திருகோணமலைக்கு இழுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கோளாறைச் சரிசெய்வதற்காகத் தனியார் நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்ப உதவி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்தார்.
தனியார் நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், குறித்த கப்பல் பாதுகாப்பாகத் திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இலங்கைக் கடற்பரப்பிற்குள் வந்துள்ள இந்த ஈரானியக் கப்பல் தொடர்பான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
