Main Menu

ஏஐ நோக்கி நகரும் பெருநிறுவனங்கள்: 16,000 ஊழியர்களை நீக்கும் அமேசான்!

உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும்.

அமேசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி, இது குறித்து வெளியிட்ட பதிவில், “நிறுவனத்தின் படிநிலைகளைக் குறைக்கவும், அதிகாரத்துவத்தைக் களைந்து உரிமையை அதிகரிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமேசான் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 16,000 இடங்களுடன் சேர்த்து, 2023-ம் ஆண்டிற்குப் பிறகு அமேசான் மேற்கொள்ளும் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

கரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்தபோது, அமேசான் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தியது. தற்போது நிலைமை சீராகியுள்ளதாலும், ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியாலும், கூடுதல் பணியாளர்களின் தேவை குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான் சிஇஓ ஆண்டி ஜாசி, கடந்த ஜூன் மாதமே “வரும் ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் கார்ப்பரேட் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்” என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குப் புதிய வேலை தேடிக்கொள்ள 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும், அப்படி கிடைக்காதபட்சத்தில் அவர்களுக்குப் பணிநீக்கக் கால ஊதியம் மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தெந்த நாடுகளில் இந்தப் பணிநீக்கம் அதிகம் இருக்கும் என்பது குறித்த தெளிவான விவரங்களை அமேசான் இன்னும் வெளியிடவில்லை. இந்தியாவில் உள்ள அமேசான் அலுவலகங்களும் இதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதேபோல், பின்டரெஸ்ட் மற்றும் யுபிஎஸ்  போன்ற மற்ற முன்னணி நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவது மென்பொருள் நிறுவன ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.