Main Menu

சர்வதேச நாணய நிதிய கடன் திட்டத்தை தொடர இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்ட உடன்படிக்கையில் எவ்வித மாற்றங்களும் இன்றி, அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல இரு தரப்பினரும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

டித்வா புயலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்தப் பிரதிநிதிகள் குழு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டித்வா புயலினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கைப் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வரும் வேளையில் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்பட்டமை குறித்து தமது வருத்தத்தைத் தெரிவித்த IMF பிரதிநிதிகள், சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் அரசாங்கம் எடுத்த விரைவான நடவடிக்கைகளைப் பாராட்டினர்.

அரசாங்கம் அனர்த்தத்தை கையாண்ட விதம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், கடந்த ஆண்டில் அரசாங்கம் கடைப்பிடித்த உயர் நிதி ஒழுக்கமானது இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு முக்கிய காரணியாக அமைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

திறைசேரியில் மேலதிக உபரி நிதி காணப்பட்டதன் காரணமாகவே, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 500 பில்லியன் ரூபாய் மேலதிக மதிப்பீட்டை முன்வைக்க அரசாங்கத்தினால் முடிந்ததாகக் குறிப்பிட்ட அவர்கள், இதனைப் பெரிதும் பாராட்டினர்.

இலங்கை தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் பயணிப்பதாகத் தெரிவித்த IMF பிரதிநிதிகள், நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் 6ஆவது தவணையை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்த அனர்த்தத்தினால் வறுமையில் வாழும் கிராமப்புற மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கிராமிய உட்கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கிராமப்புற மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பவே இந்த 500 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.

இந்த நடவடிக்கை எக்காரணம் கொண்டும் முறையான நிதி முகாமைத்துவத்திலிருந்து விலகிச் செல்லும் பொறுப்பற்ற செயல் அல்ல என்றும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

புள்ளிவிபரங்களின் மூலமான பொருளாதார வெற்றிகள் உண்மையாகவே சாதாரண மக்களைச் சென்றடையச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்ட உடன்படிக்கையில் எவ்வித மாற்றங்களும் இன்றி, அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல இரு தரப்பினரும் இதன்போது உடன்பட்டனர்.

இச்சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் ஆசிய பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.