Main Menu

அஜித் பவார் மறைவு: மகாராஷ்டிராவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

துணை முதல்வர் அஜித் பவாரின் மறைவை அடுத்து, மகாராஷ்டிராவுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மூன்று நாட்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார், இன்று காலை 8.45 மணி அளவில் விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘‘நாங்கள் இன்று பொது விடுமுறையை அறிவிக்கிறோம். அதோடு, மூன்று நாட்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கப்படும். அஜித் பவாரின் மறைவு ஒட்டுமொத்த மகாராஷ்டிராவுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

கடினமாக உழைக்கக்கூடிய தலைவராக அஜித் பவார் இருந்தார். எந்த ஒரு தருணத்திலும் அவர் நிலை தடுமாறியது கிடையாது. இது மகாராஷ்டிராவுக்கு கடினமான தினம். அவரைப் போன்ற ஒரு தலைவர் உருவாக நீண்ட காலம் ஆகும். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் அவர். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. நான் எனது நண்பரை இழந்துவிட்டேன். அவரது குடும்பத்துக்கு இது மிகப் பெரிய இழப்பு.

நானும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் விரைவில் பாராமதி செல்ல உள்ளோம். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசி மூலம் என்னிடம் பேசினர். தங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தனர். மகாராஷ்டிரா முழுவதும் இது சோக அலையை ஏற்படுத்தி உள்ளது.

நான், சுப்ரியா சூலேவிடம் (சரத் பவாரின் மகள் ) பேசினேன். அஜித் பவார் மகன் பார்த்தா பவாரிடமும் பேசினேன். நாங்கள் பாராமதி சென்றதும் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசி, இறுதிச் சடங்கு குறித்து முடிவெடுப்போம்’’ என தெரிவித்தார்.

அஜித் பவாரின் உடல், பாராமதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அஜித் பவாரின் மனைவி சுனித்ரா பவார், மகன் பார்த்தா பவார், சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் பிரஃபுல் படேல் ஆகியோர் டெல்லியில் இருந்து பாராமதிக்கு விரைந்துள்ளனர்.

அஜித் பவார், மகாராஷ்டிராவில் அதிக காலம் துணை முதல்வராக இருந்தவர். பிரித்விராஜ் சவான், தேவேந்திர பட்னவிஸ், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோரின் தலைமையில் அவர் துணை முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.