Main Menu

அமெரிக்கா ஒரு “சர்வதேச பயங்கரவாத நாடு” – கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கா கடத்தியுள்ள செயல் “சர்வதேச கடற்கொள்ளை” என வர்ணித்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அதனை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, முன்னதாக ஹெய்ட்டி ஜனாதிபதி ஜீன் பெர்ட்ரான்ட் அரிஸ்டைட் கடத்தப்பட்டதையும், கொங்கோ பிரதமர் பேட்ரிஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டதையும் நினைவுபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்கா ஒரு ‘சர்வதேச பயங்கரவாத நாடு’ (Global Terrorist Rogue State) என்பதை மீண்டும் உலகுக்கு நிரூபித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவேலாவின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா திட்டமிட்டு குண்டுவீச்சு நடத்தியுள்ளதையும் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு அவசியமான மின்சாரம் மற்றும் நீர் விநியோக நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

2003 ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்பிற்கு முன்னதாக அமெரிக்கா மேற்கொண்ட அழிவுகளைப் போன்றே இதுவும் அமைந்துள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதும், சிவில் கட்டமைப்புகள் அழிக்கப்படுவதும் சர்வதேச சட்டங்களின்படி ஒரு ‘போர்க்குற்றம்’ (War Crime) என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெனிசுவேலாவிலுள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்குடனேயே இந்த ஆக்கிரமிப்பு அரங்கேற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதாகக் கூறி அமெரிக்கா சொல்லும் காரணங்கள் அனைத்தும் வெறும் கண்துடைப்பு என்றும், ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகவே இந்தத் தலையீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

வெனிசுவேலாவின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், வெளிநாட்டுத் தலையீடுகளை எதிர்க்கவும் அந்த நாட்டு மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வெளியிட்டுள்ளது.

பகிரவும்...