வெனிசுவேலா மீதான அமெரிக்க தாக்குதல்: இலங்கையின் நிலைப்பாடு அறிவிப்பு
வெனிசுவேலா நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவத் தலையீடு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது குறித்து இலங்கை அரசாங்கம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.
“ஐநா சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, அனைத்து நாடுகளினதும் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகளும் இந்த விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியது கட்டாயமாகும்,” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாளை (5) நடைபெறவுள்ள ஐநா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தை தாமதமின்றி நடத்துமாறு இலங்கை தரப்பிலிருந்து முன்மொழியப்பட்டுள்ளது.
ஐநா சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை முரணாக செயற்படுகின்றமை தொடர்பில் ஐநா பொதுச்சபையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை மக்கள் விடுதலை முன்னணி (JVP) வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், “அரசாங்கம் என்பது வேறு, அரசியல் கட்சிகள் என்பது வேறு. அரசியல் கட்சிகள் தமக்கெனத் தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்க முடியும் என்றும் கூறினார்.
பகிரவும்...