Main Menu

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியினால் இன்று இரண்டாவது தடவையாக தாக்கல் செய்யப்ட்டிருந்த 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம், இரண்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான கடிதத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் நிஜாம் காரியப்பர் வெளியிட்டுள்ளார்.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2 வாக்குகள் வித்தியாசத்தில் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றைய இரண்டாது வரவு செலவுத்திட்ட விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நேரம் வழங்கவில்லை என கூறி கூச்சல் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து சபை அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக கடந்த 22 ஆம் திகதி கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்திருந்தது.

அதன்போது, ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

தேசிய மக்கள் சக்திக்கு சபையில் தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும், ஏனைய சுயேட்சைக் குழுக்கள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் பாதீடு நிறைவேற்றப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் கொழும்பு மாநகர சபையின் ஆளுமையை ஆளும் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

பகிரவும்...