பழுதடைந்த “ஐ பேட்டிற்கு” ரூ.50,000 இழப்பீடு பெற்ற அர்ச்சுனா எம்.பி
பழைய ‘அப்பிள் ஐபேட் டேப்லெட்’ கம்ப்யூட்டரை காண்பித்து, அதில் வெள்ள நீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இதேபோன்று நீங்களும் பொய்யாவது கூறி நிவாரண நிதியை பெற்றுக்கொள்ளுங்கள் என காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்றைய தினம் (30) குழுத் தலைவர் ஸ்ரீ பவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது தித்வா புயலால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதற்கான இழப்பீடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைந்ததிற்காக 50,000 ரூபா இழப்பீட்டிற்கு பதிவு செய்கின்றீர்களா? என்று பிரதேச செயலாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த குழுத் தலைவர் அந்த விண்ணப்பப் படிவம் இருப்பதாகவும், அதனை எவருக்கும் வழங்கவில்லை என்றும் கூறினார்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவிக்கையில்,
அந்த படிவங்களை வழங்கி மக்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குங்கள். தெற்கில் பலர் இந்த கொடுப்பனவுக்கான பதிவுகளை மேற்கொண்டு பணத்தினை பெறுகின்றனர். நானும் பழைய ஐபேட் டேப்லெட் ஒன்றைக் காண்பித்து, அதற்குள் தண்ணீர் போனதாகத் தெரிவித்து 50,000 ரூபாவை பெற்றுக்கொண்டேன். நீங்களும் அவ்வாறு பொய்யாவது கூறி அந்த பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். 300 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் என்னிடம் கூறினார்கள். காணொளி, படங்கள் எதுவும் தேவையில்லை. உடனடியாக அந்த கொடுப்பனவுகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுங்கள் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த சமூக மட்ட அமைப்பு ஒன்றின் பிரதிநிதி, குறித்த பதிவுகள் தொடர்பாக மக்களுக்கு சரியான விளக்கத்தை பிரதேச செயலகம் வழங்கவில்லை, கிராம சேவகர்கள் வீடுகளை வந்து பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
பகிரவும்...