திமுக நடவடிக்கை நீதிபதிகளை அச்சுறுத்துகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக-வினரின் நடவடிக்கைகள் நீதிபதிகளை அச்சுறுத்துவதுபோல உள்ளது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று முன்தினம் இரவு கூறியதாவது: செங்கோட்டையன் அரசியல் பாரம்பரியம் கொண்டவர். அவர்களுடைய கட்சி குறித்து பெருமையாகப் பேசுவார். எனவே, விஜய் குறித்த அவரது கருத்தை அப்படித்தான் பார்க்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை, மக்களவையில் திமுக எம்.பி.க்கள்,நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக ‘இம்பீச்மென்ட்’ நடவடிக்கை மேற்கொள்ள கையெழுத்து பெற்றுள்ளனர். தீர்ப்பு சாதகமாக கிடைக்கவில்லை என்பதால் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்வது மற்ற நீதிபதிகளை அச்சுறுத்துவது போன்றதுதான்.
திமுக அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டங்களுக்கும் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
