Main Menu

அடுத்த 36 மணித்தியாலங்-களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று (09) மாலை 4.00 மணிக்கு திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில்
75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின்
கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பகிரவும்...